செய்திகள்நம்மஊர்

இந்தி திணிப்பு, மத்திய பல்கலை. நுழைவு தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்: சென்னையில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு | Marxist Protest

சென்னை: இந்தி திணிப்பையும், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்படுவதையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ம.சித்ரகலா, சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: பலமொழி பேசும் நாட்டில், இந்தியை திணிக்கும் வேலையைசெய்கின்றனர். நாடாளுமன்ற, பொதுத்துறை, அரசு நடவடிக்கைகள் இனி இந்தியில்தான் இருக்கும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். 43 சதவீத மக்கள் இந்தியை பேசுவதால் இதை செய்வதாக மத்திய அரசு கூறுகிறது.

இந்தி திணிப்பு, நுழைவுத் தேர்வை எதிர்த்து முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இளையராஜா சிறந்த இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இசைத்துறையில் அவருடன் யாரும் போட்டி போடமுடியாது. ஆனால், அம்பேத்கருடன் பிரதமர் மோடியை அவர் ஒப்பீடு செய்தது எந்தவிதத்திலும் பொருத்தமற்றது. நேர்மையற்றது, நியாயமற்றது. ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கம் இதில் இருப்பதாக கருதுகிறேன்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

சென்னை அண்ணா சாலையில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாதலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அவர் கூறும்போது, “இந்தி பேசாத மாநிலங்களில் தொடர்பு மொழியாக ஆங்கிலம்தான் இருக்க வேண்டும். இந்தியை ஏற்க முடியாது என்று1968-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சிமொழி சட்டமும் இதைஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்,ஆங்கிலம் என இரு மொழி கொள்கையைத்தான் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தி திணிப்பை கைவிட வேண்டும்” என்றார்.

மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி கடலூரிலும், பெ.சண்முகம் திருச்சியிலும், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம் புதுக்கோட்டையிலும், கே.பாலபாரதி திண்டுக்கல்லிலும், சு.வெங்கடேசன் மதுரையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *