செய்திகள்நம்மஊர்

அதிதீவிர புயலாக வலுபெற்றது நிவர் புயல்..!!

தீவிரப் புயலாக இருந்த நிவர், தற்போது அதி தீவிரப் புயலாக மாறியுள்ளது. அதன் நகரும் வேகமும் கூடியுள்ளது.

இன்றிரவு புதுவை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரப் புயலாக (severe cyclonic storm) இருந்த நிவர், அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) வலுப்பெற்றுள்ளது.

இது தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 150 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 220 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று (நவ.25) இரவு அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

கரையைக் கடக்கும் சமயத்தில் பலத்த காற்றானது புதுவை, காரைக்கால், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசும். சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

ஓரிரு இடங்களில் அதி கனமழையும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று மழை காரணமாக குடிசை வீடுகள் பாதிக்கப்படலாம், விளம்பரப் பலகைகள் பாதிக்கப்படலாம்.

மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் பாதிக்கப்படலாம்.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழலாம். வாழை, பப்பாளி தோட்டப் பயிர்கள் பாதிக்கப்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *