எழுந்து நிற்க எழுது!
கவிஞர் இரா. இரவி.
தூங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் உடன்
எழுந்து நிற்க எழுது! விழித்தெழ எழுது!
கும்பகர்ணன் தூக்கம் தூங்கியது போதும்
குமுகாயம் சிறக்க எழுந்து நில்!
“தூங்காதே தம்பி தூங்காதே” என்று
திரைப்படத்தில் பட்டுக்கோட்டை எழுதினார்!
விழித்தெழு! விழித்தெழு! என்று பலரும்
வெள்ளித்திரையில் பாடல் பாடினார்கள்!
தமிழனின் தூக்கம் களைய வில்லை
தட்டி எழுப்புவோம் எழுத்தால் தட்டி எழுப்புவோம் !
உலகின் முதல்மொழி தமிழ் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!
உலகின் முதல்மனிதன் தமிழன் என்பதை
உணரவில்லை நம் தமிழர்!
அம்மா அப்பா என்று நல்ல
அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்கையில்!
ஆங்கிலத்தில் மம்மி டாடி என்கிறான்
ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றான்!
‘மம்மி’ என்றால் செத்தபிணமென்று பொருள்
மம்மியின் பொருள் அறியாது விரும்புகின்றான்!
உலகம் முழுவதும் தமிழன் வாழ்கின்றான்
உள்ளூரில் தமிழ் வாழ்கின்றதா? இல்லை!
பேருந்து நிலையத்தை ‘பஸ் ஸ்டாண்டு’ என்கிறான்
தொடர்வண்டி நிலையத்தை ‘ரயில்வே ஸ்டேசன்’ என்கிறான்!
இப்படியே தமிங்கிலம் பேசிப் பேசி
இனிய தமிழ்மொழியைக் கொல்கிறான்
தொலைக்காட்சியில் தமிழ்க்கொலை என்பது
தொடர்கதையாகத் தொடர்ந்து வருகின்றது!
பேசுகின்ற பேச்சில் ஆங்கிலத்தைக் கலந்து
பைந்தமிழ் மொழியைச் சிதைத்து வருகின்றான்!
பத்துச் சொற்கள் பேசினால் அதில்
பாதிக்கு மேல் ஆங்கிலச் சொற்கள்!
தாய்மொழி குசராத்தியை காந்தியடிகள் நேசித்தார்
தனது வரலாற்றை குசராத்தி மொழியில் எழுதினார்!
டால்சுடாயின் வழி திருக்குறளை நேசித்தார்
டால்சுடாயின் வழி தமிழை வாசித்தார்!
அடுத்த பிறவி இருந்தால் திருக்குறள் பயில
அற்புத தமிழனாகப் பிறக்க விரும்பினார்!
நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர்
நாளும் விரும்பியது அவரது தாய்மொழி வங்க மொழி!
மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தமிழ்வழி
மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து மனதில் நின்றார்!
விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் அனைவரும்
விரும்பிப் பயின்றது தாய்மொழி தமிழ்மொழி!
ஆரம்பக்கல்வி அழகுதமிழில் இருந்தால்
அறிவாளியாக குழந்தைகள் வளரும்!
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!
இல்லாதவன் பிச்சை எடுத்தால் தவறில்லை
எல்லாம் இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்!
சொற்களின் களஞ்சியம் நம் தமிழ்மொழி
சொற்களின் சுரங்கம் நம் தமிழ்மொழி!
காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கற்கண்டு கவிதைகள் உள்ள மொழி!
உலகப்பொதுமறையை உலகிற்கு தந்த மொழி
உலகம் போற்றிடும் உன்னத தமிழ்மொழி!
ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு முதல்மொழி தமிழ்
அறியவில்லை புரியவில்லை நம் தமிழர்களுக்கு!
தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை
தரணியில் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்!
தமிழைப் பிரிக்கும் சாதியும் மதமும் வேண்டாம்
தமிழரை இணைக்கும் தமிழ்மொழி வேண்டும்!
உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை
உலகத் தமிழர் யாவரும் தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் உடனே
தட்டிக் கேட்போம்! தோள் கொடுப்போம்!
ஒருநூறு ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் ஒன்று
ஓர் எச்சரிக்கை செய்துள்ளனர் ஆய்வாளர்கள்!
உலகின் முதல்மொழி தமிழைத் தமிழர்கள்
ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று உறுதி ஏற்போம்!
தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்டுவோம்
தமிழர்களோடு தமிழிலேயே உரையாடி மகிழ்வோம்!
குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்பிப்போம்
குழந்தைகள் வளர்ந்தபின்னே ஆங்கிலம் பயிலட்டும்!
ஏமாந்த காலம் முற்றுப் பெறட்டும்
ஏமாற்றமின்றி விழிப்புணர்வு பெற்றிடுவோம்!
மற்றவரின் ஒற்றுமையைக் கண்டு பாடம் கற்று
மண்ணில்உள்ள தமிழர்கள் ஒன்றிணைவோம்!
ஒரு கை தட்டினால் ஓசை வராது
ஒன்றுபடாமல் கத்தினால் யாருக்கும் கேட்காது!
தமிழ்மொழி காக்க ஒன்றுபடுவோம்!
தமிழஇனம் காக்க ஒன்றுபடுவோம்!
கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல தமிழன்
கொட்டிய கரத்தை முறிப்பவன் தமிழன்!
எழுத்திலும் வடமொழி நஞ்சு கலந்து வருகின்றனர்
எழுத்துக் கலப்பிற்கும் முடிவு கட்டுவோம்!
தமிழைத் தமிழாக தமிழர்கள் எழுதிடுவோம்
தமிழைத் தமிழாக தமிழர்கள் பேசிடுவோம்!
உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும்!
முடிந்தமட்டும் நல்ல தமிழ் பேசுவோம்
முடிந்தமட்டும் நல்ல தமிழ் எழுதுவோம்
தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்
தமிழர்கள் யாவரும் பெருமை கொள்வோம்!
‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’
தரணிக்கு நாமக்கல் கவிஞர் வரிகளை பறைசாற்றிடுவோம்!
உலகஅளவில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்கள் தமிழர்கள்
உணர்ந்து தமிழ்வழி பயின்றதால் சாதித்துக் காட்டினார்கள்!
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உரைப்பது தமிழ்மொழி
உயிருக்காக இரங்கிட இரக்கம் காட்டுவது தமிழ்மொழி!
மனிதநேயத்தை மனதிற்கு கற்பிப்பது தமிழ்மொழி
மட்டற்ற இலக்கியத்தை தன்னில் கொண்ட்து தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாய் விளக்குவது தமிழ்மொழி
அய்ந்திணை இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி!
அறம் செய்ய விரும்பு என்று சொல்வது தமிழ்மொழி
அனைவரையும் நேசிக்க வைப்பது தமிழ்மொழி!
வீரத்தை போர்விதிகளை விளக்குவது தமிழ்மொழி
விவேகத்தை தன்னம்பிக்கையை விதைப்பது தமிழ்மொழி!
எல்லா மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
எல்லா மொழிகளின் மூலமொழி தமிழ்மொழி!
ஆங்கிலத்திலும் பல சொற்கள் உள்ள மொழி தமிழ்மொழி
ஆங்கிலேயரும் விரும்பிப் படித்த மொழி தமிழ்மொழி!
மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு
மதம் கடந்து மனிதம் கற்பிக்கும் மொழி தமிழ்மொழி!
உலகத்தமிழ் மாநாடுகள் கண்ட மொழி தமிழ்மொழி
உலகமெங்கும் ஒலிக்கும் உன்னத மொழி தமிழ்மொழி!
எண்ணிலடங்காத சிறப்புப் பெற்ற மொழி தமிழ்மொழி
எண்ணத்தை தூய்மைப்படுத்திடும் மொழி தமிழ்மொழி!
கலை பண்பாடு கற்பிக்கும் மொழி தமிழ்மொழி
கனியை விட சிறந்த இனிமை மொழி தமிழ்மொழி!
தமிழ்சொற்கள் இல்லாத பிறமொழிகள் இல்லை
தரணியில் உள்ள மொழிகளில் வள்ளல் தமிழ்மொழி!
படைப்பாளிகள் அனைவருக்கும் வேண்டுகோள்
படைப்பில் விழிப்புணர்வு விதைத்திடுங்கள்!
ஆண்டாண்டு காலமாக தூங்கியது போதும்
அனைவரும் உடனே விழித்து எழுவோம்!
ஏமாளி அல்ல தமிழன் என்று மெய்ப்பிப்போம்
எப்பாடுபட்டாவது நம் தமிழ்மொழி காத்திடுவோம்!
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
அளவிற்கு மிஞ்சிய தூக்கமும் கேடாகும்
தமிழா! தமிழா! தூங்கி வழிந்தது போதும்
தமிழா! தமிழா! எழுந்து நில் எழுச்சி கொள்!
எழுந்து நிற்போம் எழுச்சி கொள்வோம்
எல்லோரும் ஒன்றிணைவோம் இன்பத்தமிழைக் காத்திடுவோம்!
Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982