கவிதைகள்

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது

பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில்
பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர்

சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின்
சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர்

தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர்
தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர்

பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர்
பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர்

இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர்
இராகத்தில் அழியாத ராகமாளிகைகள் கட்டியவர்

தனித்தும் இசையமைத்து தனிமுத்திரை பதித்தவர்
நடித்தும் சில படங்களில் நகைச்சுவை தந்தவர்

வித்தியாசமான குரலில் பாடல்களும் பாடியவர்
வேறு இசையமைப்பாளர்கள் வேண்டினாலும் பாடியவர்

மூன்று தலைமுறையாக இசை உலகில் நின்றவர்
முடிசூடி மன்னராக தமிழ்த் திரையிசையில் சாதித்தவர்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசையமைத்தவர்
தமிழக விழாக்களில் ஒலிக்கும் முதல் பாடல் வடிவமைத்தவர்

கவியரசு கண்ணதாசனுடன் நட்பாகப் பழகியவர்
கானக்குரலோன் டி.எம். சௌந்தரராசனுடன் நெருங்கியவர்

பாடகர்கள் பலருக்கு வாய்ப்புத் தந்தவர்
பாடலுக்கு இசையமைப்பதில் சக்கரவர்த்தியாக நின்றவர்

மேல்நாட்டு இசைகளையும் அறிமுகம் செய்தவர்
மெத்தப் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் பாடல் தந்தவர்

முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்தவர்
முகம் வாடும் வண்ணம் யாரிடமும் பேசாதவர்

இளையவரானாலும் இளையராஜாவோடும் இணைந்தவர்
இணைந்து சில படங்களுக்கு இசையமைத்தவர்

யுவன் சங்கர் சி .வி. பிரகாசு இசையிலும் பாடியவர்
யுகம் போற்றும் பாடலகள் வடிவமைத்தவர்

மெல்லிசை மன்னர் பட்டத்தை சிவாஜியிடம் பெற்றவர்
மெய் மறக்கும் இசையால் முன்னேற்றம் அடைந்தவர்

திரைஇசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்ந்தவர்
தித்திக்கும் பாடல்களை திரையில் வழங்கியவர்

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாடல் மூலம்
தன்னிகரில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறுதல் தந்தவர்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? பாடல் மூலம்
காதலர்களுக்கு தூது செல்லும் பாடல் யாத்தவர்

தொட்டால் பூ மலரும் பாடல் மூலம்
தொட்டார் இசை ரசிகர்களின் மனங்களை

வீடு வரை உறவு பாடல் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர்

நேற்றுவரை நீ யாரோ என்ற பாடல் மூலம்
நெடுநாள் முந்திய சங்க இலக்கியத்தை நினைவூட்டியவர்

அத்தான் என் அத்தான் பாடலின் மூலம்
அனைவரையும் பாடல் பித்தனாக மாற்றியவர்

கொடி அசைந்தும் காற்று வந்ததா பாடல் மூலம்
கொடியை இசைக் கொடியை ஏற்றியவர்

நினைக்கத் தெரிந்த மனமே பாடல் மூலம்
நினைக்க வைத்து காதலர்களுக்கு ஆறுதல் தந்தவர்

உன்னை நான் சந்தித்தேன் பாடல் மூலம்
உதடுகளால் அனைவரையும் உச்சரிக்க வைத்தவர்

பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் மூலம்
பரவசம் தந்து பலர் மனம் தன்வசம் பெற்றவர்

விண்ணோடும் முகிலோடும் பாடல் மூலம்
விண்ணில நிலவைப் பார்த்து ரசிக்க வைத்தவர்

சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் மூலம்
சோகமான ஒருதலைக் காதலை உணர்த்தியவர்

நவரசப் பாடல்கள் திரையிசையில் வடித்தவர்
நாடு போற்றும் இசையமைப்பாளராக வளர்ந்தவர்

இந்தியா பாகிசுதான் போரின் போது போர் முனை
எல்லைக்குச் சென்று வீரர்களை பாடி மகிழ்வித்தவர்

ஆர்வத்தின் காரணமாக சில படங்களில் நடித்தாலும்
அனைவரிடமும் இயல்பாக இருந்தவர் நிஜத்தில் நடிக்காதவர்

இருபதே நிமிடங்களில் முத்தான முத்தல்லவோ வடித்தவர்
இரண்டு மாதங்களில் நெஞ்சம் மறப்பதில்லை தந்தவர்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
நிந்தன் அருமை நீ இருக்கும் போதே உணர்ந்தோம்

உலகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் நினைப்பர்
உள்ளங்களில் வாழும் உனக்கு என்றும் அழிவில்லை

ஒலிக்கும் பாடல்களில் மிதக்கும் உன் ஆற்றல்
உலகம் உள்ளவரை நிலைக்கும் உன் புகழ்

காலத்தால் அழியாத பாடலகள் இசைத்தவர்
காலந்தோறும் பாடல்களில் வாழும் அரசர்

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !

நன்றி 
கவிஞர் இரா.இரவி 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top