கவிதைகள்

கட்டுரை. முப்பாலின் ஒப்பரவு கவிஞர் இரா.இரவி

முப்பாலின் ஒப்பரவு கவிஞர் இரா.இரவி

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம். பிறப்பால், நிறத்தால், தொழிலால், மொழியால், இனத்தால் ஏற்றத்தாழ்வு இல்லை என அறிவித்த இலக்கியம் திருக்குறள். மனிதன் மனிதனுக்குச் சொன்ன வாழ்வியல் நூல் திருக்குறள். திருக்குறளின் பெருமையை உலகம் உணர்ந்து விட்டது. ஆனால் தமிழர்கள் தான் இன்னும் சரியாக உணரவில்லை. தடாகத்தில் மிதக்கும் தாமரையின் மணத்தை தூரத்தில் இருக்கும் வண்டுகள் உணர்ந்து தாமரையைத் தேடி வருகின்றனர். ஆனால் தடாகத்தின் உள்ளே உள்ள தவளைகள் தாமரையின் மணம் அறியாமல் கத்துகின்றன. இந்தத் தவளைகளைப் போலவே பல தமிழர்கள் திருக்குறளின் பெருமையை அறியாமலே இருக்கின்றனர்.

ஒரு பிச்சைக்காரர் தினமும் பிச்சை எடுத்து காலம் கழித்து வந்தாராம். அவர் இறந்த பின் அந்த இடத்திலேயே அவரைப் புதைத்து விடலாம் என்று தோண்டிய போது, மிகப்பெரிய புதையல் இருந்ததாம். தன் காலுக்கு அடியில் புதையல் இருப்பது தெரியாமலே பிச்சை எடுத்து காலம் கழித்து காலமானார். அதுபோல நமது திருக்குறள் என்ற புதையல் நம்மிடம் இருப்பதை உணராத சில தமிழர்கள் பிறமொழி இலக்கியங்களை உயர்வானது என்று பெருமை பேசிக் காலம் கழித்து வருகின்றனர். திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் இந்த உலகில் இதுவரை வரவில்லை, இனி வரப்போவதும் இல்லை. ஒப்பற்ற இந்த நூலை தேசிய நூலாக அறிவிப்பதற்கு நடுவண் அரசு இன்னும் மௌனம் சாதிப்பது வேதனை.

உலகின் முதல் மொழியான தமிழ் மொழியில் அச்சான முதல் தமிழ் இலக்கிய நூல் திருக்குறள். புனிதமாகக் கருதக்கூடிய வேதங்கள் எல்லாம் தாய் பசியோடு இருத்தால், எந்தவிதக் குற்றம் செய்தோ, தவறான வழியில் பொருள் ஈட்டியோ தாயின் பசி போக்கு என்று சொல்கின்றன. ஆனால் ஒப்பற்ற திருக்குறள் ஒன்று தான்,

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை 656

ஒருவன் பெற்ற தாய் பசியோடு வருந்தும் நிலையில் இருந்தாலும் அறிவுடையோர் பழிக்கக் கூடிய தூய்மையற்ற செயல்களைச் செய்யக் கூடாது. இந்த ஒரு திருக்குறள் போதும், உலகிற்கு அறத்தை உணர்த்துவதற்கு.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூட அடிக்கடி காந்தியத்தின் வழி நடப்பதாகக் கூறுகிறார். அவர் காந்தியத்தை கடைப்பிடிக்கவில்லை என்பது வேறு. ஒபாமாவின் குரு காந்தியடிகள். காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய். டால்ஸ்டாயின் குரு நம் திருவள்ளுவர். அறிஞர் பெர்னாட்ஷாவிற்கு மிகவும் பிடித்த திருக்குறள்,

கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் 260

இன்றைக்கு மருத்துவர்கள் சைவ உணவு நல்லது என்கின்றனர். இதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது திருவள்ளுவர் கூறி விட்டார். புலால் உண்ணாமல் சைவ உணவு சாப்பிட்டு வந்தால் உலகில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்கின்றார். அதனால் தான் பெர்னாட்ஷாவிற்கு இந்தத் திருக்குறள் பிடித்தது. சிறந்த சிந்தையாளர் பேச்சாளர் திரு.வெ.இறையன்பு அவர்கள், திருக்குறளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வோடு நின்று விடாமல் அதன்படி வாழ்வதால் முத்திரை பதிக்கின்றார்

செக்கோசேலிவியா நாட்டிலிருந்து தமிழ் படிப்பதற்கு ஓர் அறிஞர் வந்து இருந்தார். அவரிடம் அதற்கான காரணம் கேட்டபோது,

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியருப்பக் காய்கவர்ந் தற்று. 100

இனிய சொற்கள் இருக்கும் போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல் இனிய கனிகள் இருக்கும் போது காய்களைத் தின்பதைப் போன்றது.

இந்தத் திருக்குறளின் கருத்தை செம்மொழியில் ஒரு பக்கம் படித்து விட்டு இவ்வளவு சிறப்பு மிக்க திருக்குறளை அதன் மூல மொழியான தமிழ் மொழியிலே படித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் படிக்க வந்தேன் என்றார் செக் மொழி அறிஞர். உலகில் தமிழையும், தமிழ்நாட்டையும் அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருக்கின்றனர் என்பது உண்மை. திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை. மொழி பெயர்க்காத மொழி, மொழியே இல்லை என்று சொல்லுமளவிற்கு உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட ஒப்பற்ற நூல் திருக்குறள். தமிழ், தமிழன் என்ற சொல்லை பயன்படுத்தாமலேயே தமிழுக்கும் தமிழனுக்கும் உலகளாவிய பெருமையை ஈட்டித் தந்த உன்னதப் படைப்பு திருக்குறள். திருக்குறளுக்கு இவ்வளவு பெருமைகளும் எதனால்? என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், மனிதனை மனிதனாக மதித்து மனித நேயத்தை, மானுடத்தை, மனித குல சமத்துவத்தை, ஒற்றுமையை உணர்த்தியதன் காரணமாகவே திருக்குறள் உலகப் புகழ் அடைந்தது. காந்தியடிகள் திருக்குறளைப் படிப்பதற்காகவே, அடுத்த பிறவி இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஏழு சீர்களைக் கொண்ட எளிமையான வடிவமும் அறிவார்ந்த கருத்துக்களின் ஈர்ப்பும் உலக மக்களை வெகுவாகக் கவர்ந்த சிறப்பினைப் பெற்றது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் 972

உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் சமம் ஒன்று தான். செய்யும் தொழில்களை வைத்து உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமைகள் கற்பிக்கப்பட்டன என்கிறார் திருவள்ளுவர். ஆதியில் இல்லை சாதி. சாதி என்ப கற்பிக்கப்பட்ட சதி என்பதை திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

இந்த உலகில் உழவுத் தொழிலை உயர்ந்த தொழிலாக வலியுறுத்தியவர் திருவள்ளுவர். மதங்களில் உழவனை உயர்ந்த சாதியாகக் குறிப்பிடவில்லை, ஆனால் திருவள்ளுவர் உழவனுக்கு உயர்ந்த இடத்தை வழங்கி உள்ளார்.

உழதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றுஎல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் 1033

உணவளிக்கும் ஒப்பற்ற உழவனை அனைவரும் கைகூப்பி வணங்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்றனர் இன்று.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும். 214

உலகிற்கு உதவும் நற்பண்புகள் உள்ளவனே, உயிர் வாழ்பவன். மற்றவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.

பிறந்ததன் பயனே பிறருக்கு உதவுவது தான். பிறருக்கு உதவாமல் சுயநலமாக வாழும் வாழ்க்கை வாழ்க்கையன்று. செத்தவனுக்குச் சமம் என்று வள்ளுவர் கோபமாக உரைக்கின்றார். பொதுநலம் பேண வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்று இலக்கணம் கூறுகின்றார்.

1330 திருக்குறள் மனப்பாடமாகத் தெரியும் என்பதை விட ஒரே ஒரு திருக்குறள் வழி வாழ்கிறேன் என்பது தான் பெருமை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற. 34

ஒருவன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம் ஆரவாரத் தன்மை உடையவையாகும். இந்த ஒரே ஒரு திருக்குறளை உலகம் கடைப்பிடித்தால் போதும். உலகில் அமைதி நிலவும். மனத்தில் குற்றம் இல்லாமல் மனச்சாட்சிக்கு பயந்து, நீதி நேர்மையுடன் வாழ்ந்தால் போதும். அது தான் சிறந்த அறம் என்கிறார் திருவள்ளுவர். மனசாட்சியை அடகு வைத்து விட்டுத் தீய செயல்களில் ஈடுபடுவதால் தான் உலகில் வன்முறை நிலவுகின்றது. அமைதி அழிகின்றது.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இருக்கா இயன்றது அறம். 35

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களையும் விட்டு நடப்பதே அறமாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொள்வது, பிறருடைய பொருளுக்கு ஆசைப்படுவது, கோபம் கொள்வது, கடுமையான சொற்களைப் பேசுவது, மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை இவற்றின் காரணமாகவே வீட்டிலும், நாட்டிலும், உலகத்திலும் வன்முறை நிகழ்கின்றது. அதனால் தான் புத்தன், ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார். புத்தரை கடவுளாக வணங்கும் சிங்களவனின் ஆசையின் காரணமாக போர் மூண்டது. இலட்சக்கணக்காண தமிழ் உயிர்கள் மாண்டது. இந்தத் திருக்குறளை இராஜபக்சே கடைபிடித்து இருந்தால் மனிதநேயம் மலர்ந்து இருக்கும்.

திருக்குறள் நெறியைக் கடைப்பிடித்து வெற்றி பெற்ற மனிதர் மாமனிதர் அப்துல்கலாம். பேசும் இடங்களில் எல்லாம் திருக்குறளை உச்சரிப்பது மட்டுமன்றி அதன்படி வாழ்ந்து வருவதால் தான் உலகப்புகழ் அடைந்தார்.

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம். உலகில் பிறப்பால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை. நானே பெரியவன் என்ற அகந்தையை அழிக்க வேண்டும். யாரும் யார் மீதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. ஆளப்பிறந்தவன் என்றும் அடிமை என்றும் யாரும் இல்லை. பிறரை ஆட்டிப் படைத்து அடிமைப்படுத்தி ஆள நினைக்கும்போதுதான் அங்கே புரட்சி வெடிக்கின்றது.

பெரும்பான்மையினர் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு சிறுபான்மையினரை நசுக்கப் பார்ப்பது மூடத்தனம். ஒரு நாட்டில் சிறுபான்மையாக இருப்பவர்கள் உலக அளவில் பெரும்பான்மையினராக இருப்பார்கள். எனவே, சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். நமக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் மற்றவருக்கும் உள்ளது என்பதை உணர வேண்டும். நாம் பிறர் எப்படி நம்மிடம் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அது போலவே, பிறரிடம் நாம் நடந்துகொள்ள வேண்டும். இந்த உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் மண்ணில் பிறந்தவர்கள் தான். வானிலிருந்து வந்தவர்கள் எவரும் உலகில் இல்லை. விண்ணிலிருந்து வந்தவன் நான் என்ற அகந்தையுடன் பிறரை ஆட்டிப் படைத்தவர்கள் எல்லாம் முடிவில் அழிந்து மண்ணில் போனதாகவே வரலாறு உள்ளது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு 423

எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும், கூறியவர் யார்? என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும். திருவள்ளுவரின் 1330 திருக்குறளில் எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள் இது.

கீதையில் கண்ணன் கூறியதாக, நான்கு வர்ணத்தை நானே படைத்தேன் என்று கூறி உள்ளனர். இதனைப் பலர் கடவுள் கண்ணனே கூறிவிட்டார் என அப்படியே நம்பிவிடும் மூடர்கள் உண்டு. இந்த இடத்தில்தான் திருவள்ளுவரின் திருக்குறள் நமக்குப் பயன்படுகின்றது. கண்ணன் கூறியதைக் கேட்டது யார்? சாட்சி யார்? ஒருவேளை கண்ணனே கூறினாலும் தவறு தவறுதான், கூறியது யார் என்பது முக்கியமல்ல. கூறிய கருத்து சரிதானா? உண்மையா? ஏற்புடையதா? என ஆராய வேண்டும். நெற்றியில் பிறந்தான், தோளில் பிறந்தான், தொடையில் பிறந்தான், காலில் பிறந்தான் என கற்பனைக் கதையை உலவ விட்டு நம்ப வைத்துவிட்டனர். திருவள்ளுவரின் திருக்குறள் உதவியோடு வள்ளுவரின் கண்ணாடி அணிந்து பார்க்கும்போது, கற்பனைக் கதைகள் தவிடு பொடியாகிவிடுகின்றன. பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும். நெற்றியிலும், தோளிலும், தொடையிலும், காலிலும் பிறக்க முடியுமா? உயர்சாதிக்காரர்கள் உழைக்காமல் உண்பதற்கு வசதியாக, கற்பனையாக கற்பிக்கப்பட்ட கதைதான் இது என்ற முடிவுக்கு வரமுடியும் அறிவின் துணையுடன். திருக்குறள் அறிவுநூல்.

சாதி என்பதே உயர்சாதிக்காரர்களின் சதி என்பதை உணர முடியும். இந்த உலகில் உள்ள உயிரினங்களில் ஆறறிவு பெற்றவன் மனிதன் தான். ஆறாவது அறிவான பகுத்தறிவைப் பயன்படுத்துவதே இல்லை. வெண்தாடி வேந்தர், பகுத்தறிவுப் பகலவன், ஈரோட்டுச் சிங்கம், தந்தை பெரியார் எதையும் ஏன்? எதற்கு? எப்படி என்று கேட்கச் சொன்னார். இராமாயணம், மகாபாரதம் படித்தவர் பெரியார். அவற்றை வெறுத்தார். தீயுக்கு இரையாக்க வேண்டும் என்றார். ஆனால் திருக்குறளை நேசித்தார். தமிழர்களின் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் திருக்குறள் என்று சொல்லி திருக்குறள் மாநாடு நடத்தி பெருமை சேர்த்தார்.

தந்தை பெரியார், சாக்ரடீஸ் போன்ற பல உலக அறிஞர்களின் குரு நமது திருவள்ளுவர். திருவள்ளுவரின் கூற்று உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம், ஏற்றத்தாழ்வு என்பது கற்பித்தலே, கற்பனையே. ஏற்றத்தாழ்வு கற்பித்தல் காரணமாக உலக அமைதி அழிகின்றது. எனவே திருவள்ளுவரின் ‘சமநோக்கு’ ஒப்புரவு பார்வையோடு மனிதநேயத்தோடு சக மனிதனை மனிதனாக மதித்து வாழ்வோம். முக்காலமும் பொருந்தக் கூடிய முப்பால் நம் திருக்குறள். தமிழுக்கு மகுடம் சூட்டிய திருக்குறள் வழி நடப்போம். திருக்குறளின் மூல மொழியான தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட உலகத் தமிழர்கள் யாவரும் தமிழர்களாக பிறந்ததற்கு பெருமை கொள்வோம்.

நன்றி
கவிஞர் இரா.இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment on gist

Most Popular

Tamil Deepam

started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World.

About Us

TamilDeepam.com was started to provide the news updates in neutral view for the larger online community of users in Tamil Nadu,India and all over the World. We identified this online opportunity used to give the awareness in all aspects to the tamil speaking people.

Copyright © 2021 TamilDeepam.com, powered by Wordpress.

To Top