உறவுகள் மேம்பட மூன்று வழி சோதனை கதை !
உறவுகள் மேம்பட மூன்று வழி சோதனை கதை !
எப்போதும் இறை சிந்தனையில் இருக்கும் ஒரு துறவியிடம் ஒருவர் வந்தார். “சுவாமி! தங்கள் சீடன் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்வதற்காக வந்திருக்கிறேன்“ என்றபடி ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
“ஒரு நிமிஷம் பொறுங்கள்” என்ற துறவி, “எந்த விஷயத்தையும் நான் கேட்பதற்கு முன்பு மூன்று கட்டங்களில் அதை சோதித்துப் பார்ப்பேன். அந்த சோதனைக்கு பிறகே அதை நம்புவேன்” என்று வந்தவரிடம் சொன்னார்.
வந்தவர் குழம்பி விட்டார். “அது என்ன சோதனை சுவாமி?” என்று கேட்டார்.
” சோதிக்கும்போது உங்களுக்கே தெரியும்” என்று சிரித்தபடி சொன்னார் துறவி.
“ முதலில் உண்மைக்கான சோதனை. நீங்கள் சொல்லப்போகும் விஷயம் உங்கள் கண்களால் பார்த்ததா?”
வந்தவர் ‘ இல்லை‘ என்பது போல தலையசைத்தார். “இல்லை சுவாமி ! வேறொருவர் சொல்லி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைத்தான் சொல்ல வந்தேன்… “
” ஓஹோ ! அப்படியானால் நீங்கள் சொல்லப்போவது உண்மையா… பொய்யா… என்பது உங்களுக்கே தெரியாது… சரி !
அடுத்த சோதனைக்கு போவோம். “இரண்டாவது நன்மைக்கான சோதனை. நீங்கள் சொல்ல வருவது என் சீடனைப் பற்றி நல்ல விஷயமா? கெட்ட விஷயமா ?
“கெட்ட விஷயம்தான் சுவாமி !”
“என் சீடனைப் பற்றி உண்மையா என்று தெரியாத ஒரு கெட்ட விஷயத்தைச் சொல்ல வந்திருக்கிறீர்கள்…. சரி ! “சோதனை மூன்றாவது கட்டத்துக்குப் போவோம்.இது மகிழ்ச்சிக்கான சோதனை. நீங்கள் சொல்லும் விஷயத்தைக் கேட்டால் எனக்கு ஏதாவது சந்தோஷம் கிடைக்குமா?”
“இல்லை சுவாமி. மனவருத்தம்தான் மிஞ்சம். “
அப்போது துறவி சிரித்தபடி அந்த நபரை ஆழமாக பார்த்தார்.
“எனக்கு மனவருத்தம் தருகிற, உண்மையா எனத் தெரியாத, ஒரு கெட்ட விஷயத்தை நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்? நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்? “
வந்தவர் பேசாமல் தலைகுனிந்து திரும்பிப் போனார்.
நிறைய இடங்களில் நட்புகள் உடையும், உறவுகள் முறியும் புறம் பேசுதலே காரணமாக அமைகிறது. நாம் நேரடியாகக் கண்ணால் பார்க்காத, காதால் கேட்காத ஒரு விஷயத்தை உண்மை என நம்பி அடுத்தவர்களிடம் சொல்வதில் எச்சரிக்கை வேண்டும். அதனால் யாருக்காகவது நன்மை விளையும் என்றால், சொல்வதில் பிரச்சினை இல்லை. ஒரே விஷயமே சொல்லும் தொனியைப் பொறுத்து அர்த்தம் மாறிவிடும் சூழல் இருக்கும்போது, கண்ணுக்குத் தெரியாத யார் யாரையோ ஏன் எதிரிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்? அன்பால் நட்பு எனும் பூக்களை எங்கும் மலர விடுவோம்!
நன்றி....
கதை