உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் இணைந்த
உயிர்கள் உச்சரிக்கும் உன்னத சொல் அம்மா !
உலக உறவுகளின் சிகரம் அம்மா
உலகம் போற்றிடும் உன்னத உறவு !
உயிரும் உடலும் தந்த வள்ளல்
உயிர் வளர்த்த உன்னத செம்மல் !
வயிற்றில் இருக்கையில் எட்டி உதைக்கையில்
வலிதாங்கி எண்ணிச் சிரித்து மகிழ்ந்தவள் !
வலிகளின் உச்சம் என்பது பிரசவவலி
வலிமையோடு வலி தாங்கி ஈன்றவள் !
அழுகையின் காரணம் அறிந்து உடன்
அவற்றை நிறைவேற்றி மகிழ்ந்த உள்ளம் !
தன் தூக்கம் மறந்து பெற்ற
தன் சேயின் தூக்கம் காத்தவள் !
பாலோடு பாசமும் தந்திட்ட பாரி
தேனோடு மருந்தும் தந்திட்ட ஓரி !
கண்ணும் கருத்துமாய் கவனித்து வளர்ப்பவள்
கட்டியவனை விட குழந்தையை நேசிப்பவள் !
கெட்டவன் ஆனாலும் விட்டுத்தர மாட்டாள்
நல்லவன் என்றே மற்றவரிடம் வாதிடுவாள் !
உலகமே வெறுத்து ஒதிக்கினாலும் அவள்
ஒருபோதும் வெறுப்பதில்லை பெற்றவனை !
உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
ஒப்பற்ற பெற்ற அம்மாவிற்கு நிகர் ஏதுமில்லை !
நன்றி..
கவிஞர் இரா .இரவி

Warning: Attempt to read property "term_id" on bool in /home/u859506492/domains/tamildeepam.com/public_html/wp-content/themes/flex-mag/functions.php on line 982