கதைகவிதைகள்வாழ்வியல்

மேகத்தில் கரைந்த நிலா! கவிஞர் இரா. இரவி

மேகத்தில் கரைந்த நிலா! கவிஞர் இரா. இரவி


மேகத்தில் கரைந்த நிலா வானில்
மனசோகத்தில் கரைந்த நிலா மண்ணில்

மேகங்கள் நிலவை மறைக்கலாம் சில நிமிடங்கள்
மேகங்கள் விலக்கி ஒளிர்ந்திடும் நிலவு!

சோகங்கள் விலக்கி ஒளிர்ந்திடு என்னவளே!
கவலைப் படுவதால் விலகுவதில்லை கவலை !

கவலையை விடுத்து கவனத்தை மாற்று
ஏழ்மைக்கு என்றும் வருந்தாதே பெண்ணே !

இன்றைய நிலை நாளை மாறலாம் நம்பிடு
இனிமை என்பது பணத்தால் வருவது அன்று !

பணம் பெற்றதால் நிம்மதி இழந்தோர்
பாரதம் முழுவதும் உள்ளனர் அறிந்திடு !

நிம்மதி என்பது பணத்தில் இல்லை
நின் மதியை பணத்திலிருந்து விலக்கிடு!

பல பணக்காரர்கள் வாழ்க்கை சிறையில்தான்
பணத்தாசை பிடித்தவர்கள் முடிவு சோகம் தான் !

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும்
வளமான மனமே நலம் தரும் வாழ்க்கை தரும் !

வாழ்வதற்கு பொருள் வேண்டும் புரிகிறது
வாழ்வதிலும் பொருள் வேண்டும் புரிந்திடு !

பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை
பிறந்தோம் சாதித்தோம் என்பதே வாழ்க்கை !

அடுத்தவரோடு ஒப்பிட்டு வாழ்வது வாழ்வன்று
அனைவருக்கும் பொது வாழ்வு அமைவதன்று !

ஐந்து விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை
ஐந்தும் ஒரே மாதிரி இருந்தால் பயனில்லை !

ஏற்றம் இறக்கம் எல்லோர் வாழ்விலும் உண்டு
எதையும் ஏற்கும் பக்குவம் பெற்றிட வேண்டும் !

மாட மாளிகையில் வாழ்வோர் இன்பமாக இல்லை
மாட மாளிகை அவர்களுக்கு இன்பம் தரவில்லை !

குடிசையில் கூட கும்மாளமாக வாழ்வோர் உண்டு
குடிசையிலும் குதூகலம் நிலைப்பது உண்டு !

மேகத்தில் கரைந்த நிலா போதும் போதும்
மேகத்தை விட்டு வந்து அழகாய் ஒளிர்ந்திடு!

சோகத்தில் கரைந்த நிலா போதும் போதும்
சோகத்தை விட்டு வந்து அழகாய் ஒளிர்ந்திடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *