கவிதைகள்வாழ்வியல்

ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி

பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம்பூச்சி

பறவை கூண்டில்
புள்ளிமான் வலையில்
மழலை பள்ளியில்

வானத்திலும் வறுமை
கிழிசல்கள்
நட்சத்திரங்கள்

புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல்

உயரத்தில்
பஞ்சுமிட்டாய்
வான் மேகம்

டயர் வண்டி ஓட்டி
நாளைய விமானி
ஆயத்தம்

பிறரின் உழைப்பில் தன்னை
பிரகாசிக்க வைத்துக் கொள்ளும்
முழு நேர சோம்பேறிகள் முதலாளி

சந்திரன் அல்லி
நான் அவள்
காதல்

கடல் கரைக்கு
அனுப்பும் காதல் கடிதம்
அலைகள்…

அமாவாசை நாளில்
நிலவு
எதிர் வீட்டுச் சன்னலில்

விதவை வானம்
மறுநாளே மறுமணம்
பிறை நிலவு

வழியில் மரணக்குழி
நாளை
செய்தியாகி விடுவாய்

கோடை மழை
குதூகலப்பயணம்
திரும்புமா? குழந்தைப்பருவம்

வானம்.
கட்சி தாவியது
அந்திவானம்.

மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி

மானம் காக்கும் மலர்
வானம் பார்க்கும் பூமியில்
பருத்திப்பூ

என்னவளே உன்
முகத்தைக் காட்டு…
முகம் பார்க்கவேண்டும்

ஒலியைவிட ஒளிக்கு
வேகம் அதிகம்
பார்வை போதும்

கிருமி தாக்கியது
உயிரற்ற பொருளையும்
கணினியில் வைரஸ்

மரபுக் கவிதை
எதிர்வீட்டு சன்னலில்
என்னவள்…

நல்ல விளைச்சல்
விளை நிலங்களில்
மகிழ்ந்து நிறுவனங்கள்

கத்துக்குட்டி உளறல்
நதிநீர் இணைப்பு
எதிர்ப்பு

நல்ல முன்னேற்றம்
நடுபக்க ஆபாசம்
முகப்புப் பக்கத்தில்

இன்று குடிநீர்
நாளை சுவாசக்காற்று
விலைக்கு வாங்குவோம்

பெட்டி வாங்கியவர்
பெட்டியில் பிணமானவர்
பிணப்பெட்டி

உணவு சமைக்க உதவும்
ஊரை எரிக்கவும் உதவும்
தீக்குச்சி

நடிகை வரும் முன்னே
வந்தது
ஒப்பனை பெட்டி

தனியார் பெருகியதால்
தவிப்பில் உள்ளது
அஞ்சல் பெட்டி

தாத்தா பாட்டியை
நினைவூட்டியது
வெற்றிலைப்பெட்டி

நகைகள் அனைத்தும்
அடகுக் கடையில்
நகைப்பெட்டி?

மூடநம்பிக்கைகளில்
ஒன்றானது
புகார்ப்பெட்டி

கரைந்தது காகம்
வந்தனர் விருந்தினர்
காகத்திற்கு

அவசியமானது
புற அழகல்ல
அக அழகுதான்

சண்டை போடாத
நல்ல நண்பன்
நூல்

ரசித்து படித்தால்
ருசிக்கும் புத்தகம்
வாழ்க்கை

சக்தி மிக்கது
அணுகுண்டு அல்ல
அன்பு

அழகிய ஓவியிமான்து
வெள்ளை காகிதம்
துரிகையால்

மழை நீர் அருவி ஆகும்
அருவி நீர் மழை ஆகும்
ஆதவனால்

ஒன்று சிலை ஆனது
ஒன்று அம்மிக்கல் ஆனது
பாறை கற்கள்

காட்டியது முகம்
உடைந்த பின்னும்
கண்ணாடி

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை

கூர்ந்து பாருங்கள்
சுறுசுறுப்பை போதிக்கும்
வண்ணத்துப்பூச்சி

இல்லாவிட்டாலும் கவலை
இருந்தாலும் கவலை
பணம்

உடல் சுத்தம் நீரால்
உள்ளத்தின் சுத்தம்
தியானத்தால்

மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
மயில் இறகு குட்டி போடும்

பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் தொட்டி மீன்கள்

அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
அம்மாவிற்கு விடுமுறை

இளமையின் அருமை
தாமதமாக புரிந்தது
முதுமையில்

தோற்றம் மறைவு
சாமானியர்களுக்குதான்
சாதனையாளர்களுக்கு இல்லை

நன்றி
கவிஞர் இரா.இரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *